மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.